தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,524 பேருக்கு பணி நியமன ஆணை


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,524 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 28 July 2019 4:45 AM IST (Updated: 28 July 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,524 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் வேலைவாய்ப்பு வழங்கும் 95 தனியார் நிறுவனங்களும், திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் 10 தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் தொடங்க அரசு அளிக்கும் மானிய கடன்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2,950 பேர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பணிக்கு தேர்வானவர்களுக்கு ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோனிஷா, சுந்தரம், மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்னாபால முருகன் ஆகியோர் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்கள்.

இந்த விழாவில் 1,524 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பேசியதாவது:-

படித்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 1,559 பேர் தனியார் துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இந்த முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பணிக்கு தேர்வாகி உள்ளனர். தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தனித்திறன்கள் வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் நிறுவனங்கள் மூலம் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

விருப்பமுள்ளவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் மானியக்கடன்கள் குறித்து விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் மகேந்திரன், தனியார் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story