அரியலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் டி.ஜி.வினய் வழங்கினார்


அரியலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் டி.ஜி.வினய் வழங்கினார்
x
தினத்தந்தி 28 July 2019 4:30 AM IST (Updated: 28 July 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர்,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். விழாவில் அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 133 பள்ளிகளை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது கலெக்டர் வினய் பேசியதாவது:-

பெருமை சேர்க்க வேண்டும்

மாநில அளவில் அரியலூர் மாவட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் முறையே எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் 12-ம் இடத்திலிருந்து, 11-வது இடத்திற்கும், பிளஸ்-1-ல் 28-வது இடத்திலிருந்து, 27-வது இடத்திற்கும், பிளஸ்-2-ல் 31-வது இடத்திலிருந்து, 23-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது என்ற செய்தி எனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே போல வருகிற மார்ச் மாத அரசு பொதுத் தேர்விலும் நல்லதொரு தேர்ச்சி சதவீதத்தை பெற்று தமிழக அளவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், உங்கள் பள்ளிக்கு தேவையான அனைத்து வகை உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக செய்து கொண்டு வருகிறேன். ஏதேனும் உங்கள் பள்ளிக்கு உதவிகள் வேண்டுமானால் என்னிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், மணிவண்ணன், மணிமொழி, நேர்முக உதவியாளர் காமராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story