மதுபான விலை உயர்வுக்கு அரசாணை வெளியீடு: கலால்துறை மூலம் அரசுக்கு ரூ.117 கோடி கூடுதல் வருவாய்
மதுபான விலை உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.117 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
புதுச்சேரி,
புதுவை அரசின் வருமானத்தை பெருக்க கடந்த அமைச்சரவை கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுபானங்கள் மீதான கலால் வரி, கூடுதல் வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
அமைச்சரவை முடிவின்படி வரியை அதிகரிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி சாதாரண குவார்ட்டர் மதுவானது ரூ.2 முதல் ரூ.12.50 வரையிலும், நடுத்தர, உயர்தர மதுபானங்களுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரையிலும் விலை உயர்கிறது.
இந்த வரி உயர்வினால் பீர் விலையும் உயர்கிறது. அதிகபட்சமாக பீர் விலை ரூ.10 வரை உயர்கிறது. தற்போது கடையில் உள்ள இருப்புகள் அனைத்தையும் இந்த விலைக்கே விற்கவேண்டும்.
இருப்புகள் தீர்ந்தவுடன் புதிதாக வரும் மதுபான வகைகளை உயர்த்தப்பட்ட விலையில் விற்கவேண்டும் என்று கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.117 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.