விநாயகர் சிலைகளுக்கு ரசாயன சாயத்தை பயன்படுத்த வேண்டாம்; மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள்


விநாயகர் சிலைகளுக்கு ரசாயன சாயத்தை பயன்படுத்த வேண்டாம்; மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 July 2019 3:45 AM IST (Updated: 28 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலைகளுக்கு ரசாயன சாயத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுச்சேரி,

வருகிற செப்டம்பர் மாதம் 2-ந் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

இந்த விநாயகர் சிலை தயாரிப்பில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ஸ்மிதா ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகையின்போது வண்ணம் தீட்டாத சிறிய களிமண் விநாயகர் உருவ சிலைகளை நீர்நிலைகளில் மூழ்க வைப்பது (கரைப்பது) நமது நாட்டின் மரபாகும். இதனால் நீர் நிலைகள் பெரிதும் மாசு அடையவில்லை. தற்போது வண்ணம் தீட்டிய பெரிய உருவ சிலைகளை செய்து வழிபட்டு பின்னர் நீர்நிலைகளில் மூழ்க வைப்பதால் நீர் நிலைகள் மாசு அடைவதற்கு காரணமாகிறது. இதுதொடர்பாக விரிவான நெறிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் வகுத்துள்ளது.

குறிப்பாக கீழ்க்காணும் நெறிமுறையை நாம் பின்பற்றி சுற்று சூழலுக்கு நலம் பயக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*வண்ணம் தீட்டாத சிறிய விநாயகர் உருவ சிலையை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம்.

*உருவசிலையை தயாரிப்பதற்கு வேகவைத்து சுட்ட களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிசுக்கு பதிலாக சாதாரண களிமண்ணையே பயன்படுத்துவது நல்லது.

*விஷத்தன்மையுடைய மற்றும் அழியாத ரசாயன சாயத்தை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அவ்வாறு பயன்படுத்துவோமேயானால் நீர்நிலைகள் மாசடைவது இன்றி அந்நீரில் வாழக்கூடிய மீன்கள் மற்றும் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

*வண்ணம் தீட்ட வேண்டுமெனில் நீரில் எளிதில் கரையக்கூடிய மற்றும் விஷத்தன்மையற்ற இயற்கையான சாயத்தை பயன்படுத்தலாம். இதனால் நீர் மாசடைவதில்லை.

*வழிபாட்டு பொருட்களான பூ, வஸ்திரம் மற்றும் காகிதம், பிளாஸ்டிக்கால் ஆன அலங்கார பொருட்களை ஆங்காங்கே போடுவதை தவிர்த்து அதற்கான குறிப்பிட்ட இடத்தில் போட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*உருவ சிலையை மூழ்க வைக்கும் இடங்களில் குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

*உருவச்சிலையை கடலில் ஆழம் பார்க்காமல் தாழ்ந்த மற்றும் உயர்ந்த அலைகளுக்கு இடையே மூழ்க வைக்கவேண்டும்.

*உருவ சிலையை கடலில் மூழ்க வைப்பதற்கு புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.

*நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க சுற்றுச்சூழலை மேம்படுத்த மேற்கண்ட நெறிமுறைகளை பொதுமக்கள் விழா குழுவினர் மற்றும் மத சம்பந்தப்பட்ட தலைவர்களி பின்பற்றி ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story