தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டிய விவகாரம்; செல்போன் அழைப்பு விவரங்களின்படி தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்க முடிவு


தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டிய விவகாரம்; செல்போன் அழைப்பு விவரங்களின்படி தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்க முடிவு
x
தினத்தந்தி 28 July 2019 4:00 AM IST (Updated: 28 July 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக செல்போன் அழைப்பு விவரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

ராமநாதபுரம்,

ஐக்கிய அரபு நாட்டில் இருந்தவாறு தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டியதாக நாடு கடத்தப்பட்டு டெல்லியில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அன்சாருல்லா இயக்கத்தை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

இவர்களில் 4 பேர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையையும், ஒருவர் வாலிநோக்கம் தனிச்சயம் பகுதியையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவர்களது வீடுகளில் கடந்த 20-ந் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல பொருட்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் மேற்கண்டவர்களிடம் அடிக்கடி பேசிய உறவினர்கள், நண்பர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

இந்த செல்போன் அழைப்பு விவரங்களின் அடிப்படையில் அதிக நேரம் பேசியவர்கள், அடிக்கடி பேசிய நபர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் அடிப்படையில் அதிகாரிகள் ஓரிரு நாளில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதவிர ராமநாதபுரம் அருகே ஒரு சில பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பண பரிமாற்றம் செய்து வருவதாக கூறப்படும் சில நபர்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

Next Story