மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் மாநில செயற்குழுவில் வலியுறுத்தல்


மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் மாநில செயற்குழுவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் பிரபுராம் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் அருள்பிரகாசம் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் நம்பிராஜன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் தங்கவேலு வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில், தமிழ்நாட்டில் மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும். மருத்துவத்துறையில் காலியாக உள்ள அனைத்து நிர்வாக ஊழியர் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணிநியமனம் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் பணி ஆணை வழங்க வேண்டும். பணிமூப்பு பட்டியலை உடனடியாக வலைத்தளத்தில் வெளியிட வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பினை தட்டிப்பறிக்கின்ற அரசாணை 56-ஐ ரத்து செய்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய பென்சன் திட்டம்

மேலும் பொதுவான கோரிக்கையாக புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்றும், 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், தொகுப்பூதியம்-மதிப்பூதியம் முறையை முற்றிலுமாக கைவிட்டு அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணிநியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முடிவில் மாநில துணைத்தலைவர் விவேகானந்தன் நன்றி கூறினார்.


Next Story