குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் விவசாய சங்கங்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைவாசல்,
சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்தாண்டு ரூ.5.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஏரி, குளங்களை தூர்வாரி நீர் சேமித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆத்தூர் பகுதியில் தென்னங்குடிபாளையம் கிராமத்தில் உள்ள ஆத்தூர் புதுஏரி மற்றும் வரத்து வாய்க்கால் புனரமைக்கும் பணிகள் மற்றும் துலுக்கனூர் ஏரி வரத்து வாய்கால் புனரமைக்கும் பணிகளில் விவசாய சங்கங்களில் உள்ள விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரி மற்றும் வரத்து கால்வாய் புனரமைக்கும் பணி, திட்டச்சேரி கிராமத்தில் உள்ள திட்டச்சேரி ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்கள் புனரமைக்கும் பணி, ஜங்கம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஜங்கம்மசமுத்திரம் அணைக்கட்டு நேரடி பாசன வாய்க்கால் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் விவசாய சங்க பிரதிநிதிகளோடு கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பழைய ஏரி கரையில் உள்ள மண் கரையின் அளவை உயர்த்துதல், கரைகளை பலப்படுத்துதல், ஏரியில் உள்ள அனைத்து செடி, கொடிகள், தாவரங்கள், மரங்களை வேரோடு அப்புறப்படுத்துதல், அணைகளை கான்கிரீட் கொண்டு பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல், நீரோட்ட தளத்தில் பழுதுகளை சரிசெய்தல், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், வாய்க்கால்களை புனரமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஏரி, பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் சிறப்பாகவும், நல்ல முறையில் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டார்.
மேலும், கலெக்டர் ராமன் கூறும்போது, மழைக்காலம் தொடங்க உள்ளதால் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரி கரைகளை செம்மைப்படுத்தி நீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மழை நீரை சேமிப்பதற்கும், குடிநீர் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், விவசாய பணிகளுக்கு தேவையான நீரை பெற்றிட இந்த குடிமராமத்து திட்டம் மிக சிறப்பான திட்டம் ஆகும். இதை விவசாய சங்க பிரநிதிகள் நல்ல வாய்ப்பாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, தாசில்தார் செல்வம், கெங்கவல்லி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story