படுகொலைகள் அதிகரித்து வருகிறது: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


படுகொலைகள் அதிகரித்து வருகிறது: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 July 2019 11:15 PM GMT (Updated: 27 July 2019 8:31 PM GMT)

“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை“ என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி,

தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயருமான உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டின் பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். அதேபோல் தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் தி.மு.க. பிரமுகர் கருணாகரன் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.

இவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கனிமொழி எம்.பி. தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமலும், நிலைக்குழுவிற்கு அனுப்பாமலும் பா.ஜனதாவினர் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் இதனை கண்டித்த பிறகும் அவர்கள் எந்தவித கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்தாமல் தனக்கு இருக்கக்கூடிய பெரும்பான்மையை கொண்டு சாதித்து விட வேண்டும் என செயல் படுகிறார்கள். இது ஒரு மோசமான முன் உதாரணம்.

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை குறித்து தி.மு.க. தொடர்ந்து சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பி வருகிறது. அமைச்சர்கள் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. படுகொலைகள் அதிகரித்து கொண்டே போகிறது. ஆணவ கொலைகள் அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் உள்ள தி.மு.க. பிரமுகர் கருணாகரன் வீட்டுக்கு கனிமொழி எம்.பி. சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Next Story