திட்டக்குடி அருகே அடகுக்கடையில் 100 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளை


திட்டக்குடி அருகே அடகுக்கடையில் 100 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளை
x
தினத்தந்தி 28 July 2019 5:00 AM IST (Updated: 28 July 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே அடகுக்கடை பூட்டை உடைத்து 100 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ராமநத்தம்,

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 44). இவருடைய மனைவி செல்வகுமாரி(35). இவர் தொழுதூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். எனவே சங்கர் குடும்பத்துடன் தொழுதூரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.

கீழ்கல்பூண்டி கிராமத்தில் சங்கர், நகை அடகுக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் நகை அடகுக்கடை பூட்டை உடைத்து, உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை தூக்கிச்சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் நகை அடகுக்கடை திறந்து கிடந்ததை கண்டு, அப்பகுதியினர் சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சங்கர் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அவருக்கு நகைகள் இருந்த இரும்பு பெட்டகத்தை மர்மநபர்கள் தூக்கிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து, அடகுக்கடையை பார்வையிட்டனர். மேலும் கடையை சுற்றியுள்ள பகுதியை பார்த்தபோது, 500 மீட்டர் தொலையில் விவசாய நிலத்தில் இரும்பு பெட்டகம் கிடந்தது. உடனே போலீசார், அதனை பார்வையிட்டனர். இரும்பு பெட்டகம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நள்ளிரவில் மர்மநபர்கள் அடகுக்கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று, இரும்பு பெட்டகத்தை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் ஏற்பட்டதால், மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த மர்மநபர்கள், அதனை அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கு கடப்பாறை கம்பியால் இரும்பு பெட்டகத்தை உடைத்து கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 100 பவுன் நகையும், 10 கிலோ வெள்ளிப்பொருட்களும் இரும்பு பெட்டகத்தில் இருந்ததாக போலீசிடம் சங்கர் கூறினார்.

இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொள்ளை நடந்த அடகுக்கடையில் மோப்பமிட்டபடி இரும்பு பெட்டகம் கிடந்த விவசாய நிலம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கொள்ளை நடந்த அடகுக்கடையில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளையும், அவர்கள் விட்டுச்சென்ற சில தடயங்களையும் சேகரித்தனர். இதனிடையே இதுபற்றி அறிந்ததும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர், அங்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம், நாங்கள் அடகு வைத்த நகை கிடைக்குமா? என்று கேட்டனர். அதற்கு போலீசார், இது தொடர்பாக விசாரித்து நகைகளை மீட்டு வழங்கப்படும் என்றனர். இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story