முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: கோவையில் வாலிபர் கைது


முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: கோவையில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 July 2019 4:04 AM IST (Updated: 28 July 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த கோவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

திராவிடர் விடுதலைக்கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார்(வயது 25). இவர், கடந்த 13-ந் தேதி மாட்டு இறைச்சி சாப்பிடுவது தொடர்பாகவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முகநூலில் பதிவிட்டிருந்தார் என்று, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மணி என்பவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து காட்டூர் போலீசார் நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் முகநூலில் பதிவிட்டது அவர்தான் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நிர்மல் குமார் மீது, மதங்கள், இனங்கள் தொடர்பாக உணர்ச்சியை தூண்டிவிடும் வகையிலும், பீதியை கிளப்பும் வகையிலும் கருத்துக்களை பரப்புவது என்ற சட்டப்பிரிவு 505(2)-ன்படி வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபு முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

இதையடுத்து நிர்மல் குமாரை வருகிற 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story