4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்


4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2019 10:15 PM GMT (Updated: 27 July 2019 10:48 PM GMT)

நெல்லிக்குப்பம் அருகே 4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையானது கடலூரில் இருந்து தொடங்கி மருதாடு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, மடப்பட்டு வழியாக சித்தூரை சென்றடைகிறது. இந்த நிலையில் கடலூர்-மடப்பட்டு சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல்கட்டமாக கடலூரில் இருந்து மருதாடு வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் குறியீடு போடப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் சென்று 4 வழிச்சாலை பணிகள் குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை நெல்லிக்குப்பம் அருகே குமராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் சாலையோர மின்கம்பங்களில் கருப்புக்கொடி கட்டி 4 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பெண்கள், பொதுமக்கள் சாலையில் கருப்புக் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கருப்புக் கொடி போராட்டத்துக்கு யாரிடம் அனுமதி கேட்டு உள்ளர்கள் என போலீசார் கேட்டனர்.

அப்போது அங்கே திரண்டு நின்ற பொதுமக்கள் 4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் வீடு மற்றும் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து உள்ளோம். எங்களிடம் கருத்துக்களை கேட்டறியாமல் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் திடீரென்று வந்து வீடுகள் மற்றும் கடைகளில் குறியீடு போட்டுவிட்டு விரைவில் 4 வழிச்சாலை அமைக்க உள்ளோம் என கூறி சென்றுள்ளனர்.

இந்த திட்டத்தால் காலம் காலமாக வாழ்ந்து வந்த கட்டிடங்கள் இல்லாமல், எங்கள் வாழ்வாதாரத்தையும் நாங்கள் இழந்து விடுவோம். இது தவிர இந்த பகுதியில் பழமையான சிவன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலும் சாலை அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ளது. கடலூர்-சித்தூர் சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சுங்கச் சாலை உள்ளது. அந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றினால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வாகனங்களும் எளிதாக சென்று வரும். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்து விட்டு சுங்கச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அமைதியாக ஊர்வலமாக சென்று, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story