மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா? என கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததை உறுதி செய்ய ‘ஸ்டிக்கர்’ சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா? என கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததை உறுதி செய்ய ‘ஸ்டிக்கர்’ சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 28 July 2019 4:27 AM IST (Updated: 28 July 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா? என கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததை உறுதி செய்யும் வகையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டவேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புனரமைக்கவும், அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இக்குழுக்களால் 1 லட்சத்து 42 ஆயிரத்து 396 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 77 ஆயிரத்து 975 கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 23 ஆயிரத்து 146 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையிலும், 41 ஆயிரத்து 275 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்காமலும் உள்ளது.

இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு தங்கள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக அமைக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்று உள்ள 144 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டு, மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

பருவமழைக்கு முன்பாக அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க இந்த குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

மேலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா? என கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததை உறுதிசெய்யும் வகையில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள கட்டிடங்களில் நீல நிற ‘ஸ்டிக்கர்’களும், புதிதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களில் பச்சை நிற ‘ஸ்டிக்கர்’களையும், கட்டிடங்களின் முகப்பில் முறையாக ஒட்டப்படவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் ஆர்.லலிதா, துணை கமிஷனர்கள் எம்.கோவிந்த ராவ், பி.மதுசுதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குனர் டாக்டர் பிரபுசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story