108 சேவை மூலம் பயனடைந்தோர் பட்டியலில் திருவண்ணாமலை 7-வது இடம் பிடித்து உள்ளது கலெக்டர் தகவல்


108 சேவை மூலம் பயனடைந்தோர் பட்டியலில் திருவண்ணாமலை 7-வது இடம் பிடித்து உள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 28 July 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

108 சேவை மூலம் பயனடைந்தோர் பட்டியலில் மாநிலத்திலேயே திருவண்ணாமலை மாவட்டம் 7-வது இடம் பிடித்து உள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

108 சேவை மூலம் கட்டணமில்லா மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவச சேவையாகும். தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் அவசர கால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது. 108 அவசர சேவை மையம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மொத்தம் 932 ஆம்புலன்சுகளுடன் இந்த 108 சேவை மக்களுக்கு தொடர்ந்து பயனளித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 86 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த 108 சேவையின் மூலம் பயனடைந்து உள்ளனர். இதில் மிக அதிகமாக பயனடைந்தவர்கள் கர்ப்பிணிகள் ஆவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 36 ஆம்புலன்சுகள் இயங்கி வருகிறது. இதில் 180 பணியாளர்கள் துரிதமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம்புலன்சுகளுடன் திருவண்ணாமலையில் 108 சேவை தொடங்கியது. இதுவரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 170 பேர் பயனடைந்து உள்ளனர். அதில் பிரசவ தாய்மார்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 559 பேர் பயனடைந்து உள்ளனர்.

மேலும் 59 ஆயிரத்து 36 பேர் சாலை விபத்துகளில் காப்பாற்றப்பட்டு உள்ளனர். 900-க்கும் மேற்பட்ட சுகபிரசவங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே நடந்து உள்ளது. அதிகளவில் 108 சேவையால் பயனடைந்தோர் பட்டியலில் மாநிலத்திலேயே மற்ற மாவட்டத்தை விட சிறப்பாக இயங்கி 7-ம் இடம் பிடித்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story