நாங்கள் சதித்திட்டம் தீட்டவில்லை: மூட்டை, மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது


நாங்கள் சதித்திட்டம் தீட்டவில்லை: மூட்டை, மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 29 July 2019 5:00 AM IST (Updated: 29 July 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் சதித்திட்டம் தீட்டவில்லை, மூட்டை, மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டதால் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பத்தில் நேற்று மாலை ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. லோகநாதன் வரவேற்றார். அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கடம்பூர்ராஜூ, ராஜேந்திரபாலாஜி, பாண்டியராஜன், ராஜலட்சுமி, பெஞ்சமின், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., முகமதுஜான் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்குகள் சேகரித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடந்து முடிந்திருக்க வேண்டும். 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தபோது வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்டது. யாரால் நிறுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நாம் திட்டமிட்டு சதி செய்து தேர்தலை நிறுத்தியதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் எதற்காக தேர்தலை நிறுத்த வேண்டும். நீங்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மூட்டை, மூட்டையாக உங்களுக்கு வேண்டப்பட்டவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பணத்தை வருமானவரித் துறையினர் கைப்பற்றியதால் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்த உண்மையை மறைத்து, அ.தி.மு.க. வேட்பாளர் வீட்டில் ஏன் சோதனை நடத்த வில்லை என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறார். யார் பணம் பதுக்கி வைத்திருக்கிறார்களோ அங்கு தானே சோதனை நடத்த முடியும். தி.மு.க.வினர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. நீங்கள் கண்டிப்பாக அந்த வழக்கை சந்திக்க வேண்டி வரும்.

காங்கிரசுடன் நீங்கள் கூட்டணி வைத்ததால் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்து விட்டது. கடந்த தேர்தலின்போது மத்தியிலும் மாநிலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று மூட்டை, மூட்டையாக மு.க.ஸ்டாலின் பொய் கூறினார். அதை நம்பி மக்கள் வாக்களித்தனர். நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் உண்மையாக சொன்னதை ஏற்று மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். நான் ஒரு விவசாயி.

விவசாயி நாட்டை ஆள கூடாதா? விவசாயி கையெழுத்து போட்டால் செல்லாதா? நான் விவசாயி என்பதால் முதல்-அமைச்சர் ஆவதை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்த போது தி.மு.க.வினர் எனது மேஜை மீது ஏறி நடனமாடினார்கள். இவர்கள் கையில் நாட்டை கொடுத்தால் உருப்படுமா?. சட்டம் இயற்றும் மன்றத்திலேயே அராஜகத்தில் ஈடுபட்டனர்.

எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. ஆட்சியை கவிழ்க்கவோ, கட்சியை உடைக்கவோ முடியாது. சபாநாயகர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் இருந்து தள்ளிவிட்டு அவரது நாற்காலியில் அமர்ந்தனர். அத்தனைக்கும் மேலாக சட்டமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது ஸ்டாலின் சட்டையை பிடித்தபடி வீதியில் நடந்து வந்தார். சட்டையை கிழித்தபடி வீதியில் வருபவர்களை எப்படி அழைப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவி வெறிபிடித்து அலைகிறார். நாங்கள் பதவிக்காக வெறிபிடித்து அலையவில்லை. எங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். நீங்கள் நல்லது செய்திருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். அ.தி.மு.க. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சி. ஆனால் அமைச்சர் ஆசைகாட்டி சில துரோகிகள் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றனர். அவர்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். ஆட்சியை கவிழ்க்க அவர்கள் நினைத்தார்கள். அது நடந்ததா? இறைவன் எங்கள் பக்கம் இருக்கிறார். துரோகிகள் 18 பேருடன் ஸ்டாலினும் சேர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க வழக்கு தொடர்ந்தனர். அதில் தோற்று போனார்கள்.

மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. சாதாரண விவசாயி கூட முதல்-அமைச்சராக வர முடியும். தி.மு.க.வை போன்று கைதிகளுக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுக்கவில்லை. அ.தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம் உண்மையாக உழைப்பவர்கள் முதல்-அமைச்சராக கூட வரலாம்.

தி.மு.க. சார்பில் இந்த தொகுதியில் துரைமுருகனின் வாரிசு போட்டியிடுகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்களுக்கு பின்னால் உங்கள் ஆதரவுடன் தற்போது நாங்கள் ஆட்சி நடத்துகிறோம். தி.மு.க.வில் ஸ்டாலினுக்கு பிறகு தற்போது உதயநிதி வந்துள்ளார். அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. அங்கு வாரிசு அரசியல் நடக்கிறது. அது ஒரு குடும்ப கட்சி. குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவிக்கு வரமுடியும் தி.மு.க.வினர் உதயநிதி புகழ்பாட தொடங்கிவிட்டனர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story