பார்வையற்றோருக்கான மாநில சதுரங்க போட்டி 22 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு


பார்வையற்றோருக்கான மாநில சதுரங்க போட்டி 22 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பார்வையற்றோருக்கான மாநில சதுரங்க போட்டி நடந்தது. இதில் 22 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான சதுரங்க போட்டி 2 நாட்கள் நடந்தது. தமிழ்நாடு பிரெய்லி சதுரங்க கழகம், டிராகன் சதுரங்க அகாடமி, யாகப்பா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் இந்த போட்டிகள் நடந்தன. போட்டிகள் 7 சுற்றுகளாக நடைபெற்றன. புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தஞ்சை, திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், ராமநாதபுரம், சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, மதுரை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கோவை, சென்னை உள்பட 22 மாவட்டங்களை சேர்ந்த பார்வையற்ற வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

62 பேர் பங்கேற்பு

போட்டியில் உலக அளவிலான பார்வையற்ற சதுரங்க வீரர்கள் 17 பேர் உள்பட 62 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சர்வதேச நடுவர் அனந்தராம்ரத்தினம், தொழிலதிபர்கள் எஸ்.பி.செல்வராஜ், விஜயகுமார், மாநில சதுரங்க கழக இணை செயலாளர் பாலகுணசேகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

முதல்பரிசை விருதுநகரை சேர்ந்த மாரிமுத்து, 2-வது பரிசை தஞ்சையை சேர்ந்த ஹரிகரன்காந்தி, 3-வது பரிசை திருவண்ணாமலையை சேர்ந்த ரபீக் ஆகியோர் பெற்றனர். முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.4 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது. போட்டி ஒருங்கிணைப்பளர்கள் டிராகன் சதுரங்க அகாடமி தலைவர் நடனசிகாமணி, செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு பிரெய்லி சதுரங்க கழக தலைவர் யசோதைபிரபு, செயலாளர் விக்னேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story