பெங்களூரு ராஜாஜிநகரில் இருப்போர் கொடுக்க, இல்லாதவர் பெற உருவான ‘அன்பின் சுவர்’


பெங்களூரு ராஜாஜிநகரில் இருப்போர் கொடுக்க, இல்லாதவர் பெற உருவான ‘அன்பின் சுவர்’
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 7:10 PM GMT)

பெங்களூரு ராஜாஜிநகரில் ‘இருப்போர் கொடுக்க, இல்லாதவர் பெற’ ‘அன்பின் சுவர்’ உருவாக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு! தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துக்கு பெயர் பெற்ற நகரம். இங்கு வானுயர்ந்த கட்டிடங்களில் வளமாக வாழும் மக்களையும், சாலைகளில் நாடோடியாக நடமாடி நடை பாதைகளை இருப்பிடமாக்கி வசிப்பவர்களையும், வறுமையில் குடிசைகளில் வசிப்பவர்களையும் காண முடிகிறது. இதில் முதல் வகையை சேர்ந்தவர்கள் பொருளாதார வசதியுடனும், 2-வது வகையை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களாகவும் உள்ளார்கள்.

இந்த 2 தரப்பையும் இணைக்கும் பாலமாக இருப்பது தான் ‘அன்பின் சுவர்’. அதாவது பொது இடத்தில் உள்ள சுவர் அல்லது இரும்பு பெட்டகத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய அல்லது கூடுதலாக வைத்திருக்கும் ஆடை, பாத்திரங்கள் உள்பட அனைத்து பொருட்களையும் வைத்து செல்லவும், அந்த பொருட்களை தேவையானவர்கள் எடுத்துச் செல்லும் இடமாக இருப்பது தான் ‘அன்பின் சுவர்‘. இந்த ‘அன்பின் சுவர்’ திட்டம் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது.

பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் ராம்மந்தீர் மைதானம் அருகே அரசு மருத்துவமனை பக்கத்தில் ‘ரோட்டரி சங்கம்’ சார்பில் இந்த ‘அன்பின் சுவர்’ அமைக்கப்பட்டு உள்ளது. இரும்பு பெட்டகம் ஒன்றில் 30 அறைகள் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என்று தனித்தனியாக அவர்களுக்கான ஆடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாத்திரங்கள், பள்ளி புத்தகங்கள், காலணிகள், ஷூக்கள், குடைகள் என்று அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வைத்து செல்லலாம்.

இவ்வாறாக, இருப்போர் கொடுக்க, இல்லாதவர்கள் எடுத்து பயன்படுத்தி கொள்ள உருவான ‘அன்பின் சுவரில்’ ஏராளமானவர்கள் தங்களிடம் கூடுதலாக இருக்கும் பொருட்களையும், பயன் படுத்திய பொருட்களையும் வைத்து செல்கிறார்கள். இந்த பொருட்களை தங்களுக்கு தேவைப்படுபவர்கள் எடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்த ‘அன்பின் சுவர்’ திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

‘அன்பின் சுவரில்’ இருந்து துணிகளை சேகரித்த ஒரு பெண் இதுபற்றி கூறுகையில், ‘ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக ‘அன்பின் சுவர்’ உள்ளது. இயலாமையில் இருக்கும் ஒருவர் இன்னொருவரிடம் இரவல் கேட்க கூச்சப்படுவார். ஆனால், ‘அன்பின் சுவர்’ திட்டத்தால் இயலாமையில் உள்ளவர் தினமும் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை சேகரித்து பயன் படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது‘ என்றார்.

இதுகுறித்து இன்னொருவர் கூறுகையில், ‘ஒருகாலத்தில் வீட்டில் 5-க்கும் அதிகமான குழந்தைகள் இருந்தனர். இதனால் ஒருவருடைய ஆடையை இன்னொருவர் பயன்படுத்தி கொண்டனர். ஆனால் தற்போது பெரும்பாலான வீடுகளில் அதிகபட்சமாக ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் உள்ளனர். இதனால் அவர்களுக்கு வாங்கும் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இந்த பொருட்களை ‘அன்பின் சுவரில்’ வைக்கும்பட்சத்தில் இன்னொருவர் அதை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது’ என்றார்.

Next Story