பர்கூரில் பழைய பேப்பர் குடோன் எரிந்து நாசம் 50 தென்னை மரங்களும் கருகின
பர்கூரில் பழைய பேப்பர் குடோன் எரிந்து நாசம் ஆனது. இந்த விபத்தில் அருகில் இருந்த 50 தென்னை மரங்களும் கருகின.
பர்கூர்,
பர்கூரில் ஜெகதேவி செல்லும் சாலையில் வசித்து வருபவர் கண்ணூர் முருகன் (வயது 65). இவர் வீட்டின் பின்புறம் பழைய பேப்பர், இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். நேற்று பகல் 11.30 மணி அளவில் திடீரென்று அந்த குடோனில் தீப்பிடித்தது.
நேரம் ஆக ஆக தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் வேலு, பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் தீ கட்டுக்குள் வரவில்லை.
இதையடுத்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் சென்றது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் குடோனை சுற்றிலும் 20 அடி உயரத்திற்கு தகரத்தால் வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இரவு வரை தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரம் வரை தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதில் பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பேப்பர்கள் உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆனது. அதன் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இதற்கிடையே அருகில் உள்ள தென்னந்தோப்பிற்கும் தீ பரவியதால் அதில் இருந்த சுமார் 50 மரங்கள் கருகின. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் கள்.
Related Tags :
Next Story