ரெயிலில் பெண்கள்-குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி


ரெயிலில் பெண்கள்-குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணம் மற்றும் ரெயில் நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் ரெயில் நிலைய கூட்டரங்கில் நடந்தது.

கரூர்,

ரெயில் பயணம் மற்றும் ரெயில் நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் ரெயில் நிலைய கூட்டரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கரூர் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பேபி தீபா கலந்து கொண்டு பேசுகையில், ஜன்னல் ஓரமாக ரெயிலில் பெண்கள் அமரும் போது தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் பேச்சு கொடுக்கும் போது, தங்களை பற்றிய சுயவிவரங்களை தெரிவிக்காமல் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான நபர்களை கண்டால், உடனே ரெயில்வே பாதுகாப்பு உதவி மைய இலவச எண் 182-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரெயில் பயணத்தின் போது ஆழ்ந்த தூக்கத்தினை மேற்கொள்ள கூடாது. குழந்தைகளை தனியாக விட்டு விட்டு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்க செல்ல கூடாது. மேலும் ரெயிலில் ஆபத்தான நிலையின் போது அபாய சங்கலியை பிடித்து இழுத்தால், பாதுகாப்பு உதவி உடனடியாக மேற்கொள்ளப்படும். அந்த வகையில் “பேனிக் பட்டன்” என்கிற பாதுகாப்பு பொத்தானை அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் ரெயில்வே துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து ரெயிலின் மீது ஏறி நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுப்பது, ரெயில்வே தண்டவாளங்களில் நடந்து செல்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், பாலசுப்ரமணியம் ஆகியோர் கேட்டு கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண் பாதுகாப்பு சேவை மைய அலுவலர் ரம்யா, சைல்டு லைன் நிர்வாகி சங்கீதா மற்றும் ரெயில் பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story