பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் கண்காணிப்பு பணியில் இந்திய கடலோர காவல் படையின் 7 கப்பல்கள்


பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் கண்காணிப்பு பணியில் இந்திய கடலோர காவல் படையின் 7 கப்பல்கள்
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் கண்காணிப்பு பணியில் இந்திய கடலோரகாவல் படையின் 7 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல்படை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கடலோரகாவல் படை நிலையத்தில் 5 ஹோவர் கிராப்ட் கப்பல்களும் மற்றும் 2 பெரிய கப்பல்களும் 3 சிறிய ரக படகுகளும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் உள்ள கப்பல்கள் மற்றும் கப்பல்களில் உள்ள துப்பாக்கிகள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. கப்பல் மற்றும் துப்பாக்கி, லைப்ஜாக்கெட் உள்ளிட்ட சாதனங்களை ஏராளமான பள்ளி மாணவர்களும் பார்த்து ரசித்தனர். கார்கில் வெற்றி குறித்த இந்திய ராணுவத்தின் சிறப்பு வீடியோவும் ஒலிபரப்பப்பட்டது.அப்போது மண்டபம் இந்திய கடலோர காவல் படை நிலைய கமாண்டன்ட் வெங்கடேஷ் ஆலோசனையின் பேரில் கடலோரகாவல்படை அதிகாரி மணிகுமார் தலைமையில் கடலோரகாவல் படையினர் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மண்டபம் கடலோர காவல் படை நிலையத்தில் 5 ஹோவர் கிராப்ட் கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் இரவு-பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றன.ஹோவர்கிராப்ட் கப்பல் ஆழம் குறைவான பகுதி மற்றும் நிலப் பகுதியிலும் செல்லும்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றி அதிகமான தீவுகள் உள்ளதாலும்,தனுஷ்கோடி பகுதியை ஒட்டி மணல் திட்டுகள் அதிகம் உள்ளதாலும் இந்த பகுதிகளில் ஹோவர் கிராப்ட் கப்பல்கள் மூலமே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதை தவிர 2 பெரிய கப்பல்களும் உள்ளன. இந்த கப்பல்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஆழ்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கப்பலில் அதிக தூரம் வரை கடலில் உள்ள பொருட்களை துல்லியமாக கண்காணிக்க கூடிய ரேடார்களும் உள்ளன.அதிவேகமாக செல்லக்கூடியதுடன் செயற்கைகோள் போன் வசதியும் உள்ளது.பெரிய கப்பலில் 20 பேர் வரையிலும் ஹோவர் கிராப்ட் கப்பல்களில் 15 பேர் வரையிலும் ரோந்து செல்வோம்.பாக்ஜலசந்தி மற்றும் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பு பணி சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story