மாவட்ட கூடுதல் நீதிமன்றம்; ஐகோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்


மாவட்ட கூடுதல் நீதிமன்றம்; ஐகோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 29 July 2019 4:00 AM IST (Updated: 29 July 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹேமலதா திறந்து வைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தொடக்க விழா சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைமை நீதிபதி கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹேமலதா நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசியதாவது:- சிவகங்கை சீமை சரித்திரம் படைத்த பூமியாகும். அதற்கு காரணம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மருதுபாண்டியர்கள், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரத்தாய் குயிலி ஆகியோரால் இந்த மண்ணிற்கு மாபெரும் பெருமை உண்டு.

சரித்திரம் மட்டுமல்லாமல் பூலோகத்திலும் இடம்பெறும் வகையில் கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலகம் போற்றும் தத்துவத்தை உருவாக்கிய அறிஞர் மகான் பிறந்ததும் இந்த மண்ணில் தான். அதேபோல் கவிஞர் சுத்தானந்த பாரதியார், மாசாத்தியார், கம்பன் போன்றோர் வாழ்ந்த பெருமையும் இந்த மண்ணிற்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மண்ணில் 100 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்றத்தால் சிறப்பு வாய்ந்த நீதிகள் வழங்கப்பட்டதுடன் இங்கு இந்த நீதிமன்றத்தின் வழக்கின் மூலம் உயர்நீதி மன்றம் வரை வழக்குகள் எடுத்து சென்று அதற்கு பாரம்பரியமிக்க தீர்ப்புகள் கிடைத்ததும் இந்த நீதிமன்றத்திற்கு பல பெருமைகள் உண்டு.

அந்த சிறப்பு மிக்க நீதிமன்றத்தின் பெருமையை மேலும் நிலைநிறுத்தும் வகையில் தற்போது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தொடங்கப்பட்டுஉள்ளது. இந்த கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் இனி வழக்குகள் தாமதம் இல்லாமல் விரைவில் உரிய நீதிகள் வழங்கப்படும். வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நீதிபதிகளுக்கு மூத்த வக்கீல்கள் மற்றும் மற்ற வக்கீல்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான் திட்ட மிட்டப்படி பணிகள் விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும்.

சிவகங்கை மாவட்டத்தில் நீதிபதிகளும், வக்கீல்களும் நல்ல இணக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அகாடமி என்று ஆரம்பிக்கப்பட்டு இளம் வக்கீல்களுக்கு நல்ல வழிகாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இங்கு மாவட்ட அளவில் அகாடமியாக உருவாக்கவிட்டாலும் முடிந்தஅளவு இளம் வக்கீல்களுக்கு மூத்த வக்கீல்கள் நல்ல கருத்துகளை எடுத்துக்கூற வேண்டும். அதேபோல் இளம் வக்கீல்கள், மூத்த வக்கீல்களை அணுகி நல்ல கருத்துகளை பெற்றுக் கொள்ளவேண்டும்.

அப்போதுதான் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் எளிதாக தெரிந்து கொள்ளவும் முடியும். அதேபோல் தீர்ப்பு வழங்குவதற்கு முன் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் திறம்பட செயல்படும்போது தான் பொதுமக்களுக்கு உரிய தீர்வு உடனுக்குடன் பெற்று பயனடைவார்கள். மேலும் சிவகங்கை பழைய நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த குடும்பநல நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம், பெண்கள் பாதுகாப்பு நல நீதிமன்றம், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் இனிமேல் இந்த ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால், வக்கீல் சங்க தலைவர் ராஜசேகரன், செயலர் முத்துராமு, மூத்த வக்கீல்கள் மோகனசுந்தரம், ஜானகிராமன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story