அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப்பெட்டகம் - கலெக்டர் தகவல்


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப்பெட்டகம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப் பெட்டகம் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தாய் -சேய் நலப்பெட்டகத்தில் குழந்தை பிறந்தவுடன் அந்த தாயும் சேயும் நலமாக இருக்க ரூ.1,000-ம் மதிப்பீட்டில் இரும்புச்சத்து டானிக், புரதச்சத்து பவுடர், 500 மி.லி. ஆவின் நெய், விதையில்லா பேரிச்சம்பழம் 2 பாக்கெட்டுகள், குடல்புழு நீக்கல் மாத்திரை 1 அட்டை, 1 கப், காட்டன் துண்டு மற்றும் பிளாஸ்டிக்கூடை உடன் 2 மெழுகுவர்த்திகள் போன்ற பொருட்கள் இருக்கும். இதன்மூலம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உன்னத திட்டமாக விளங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 4,161 கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப்பெட்டகம் வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் இதுவரை 2,201 கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப்பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கபட்ட, அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கு, தாய் மற்றும் பச்சிளங்குழந்தையை பராமரிக்க அம்மா பரிசு பெட்டகம் மூலம் ரூ.1,000-ம் மதிப்புள்ள 16 வகையான பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story