மாநில அளவிலான ஆக்கி போட்டி; திருவள்ளூர் அணி வெற்றி


மாநில அளவிலான ஆக்கி போட்டி; திருவள்ளூர் அணி வெற்றி
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணி வெற்றி பெற்றது.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் செட்டிநாடு பெண்கள் ஆக்கி கிளப் சார்பில் 3-வது ஆண்டு சாவித்திரி அம்மாள் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றன. போட்டிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ.மனோகர், செயலாளர் ரேணுகாலட்சுமி, பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் 18 அணிகள் கலந்துகொண்டு விளையாடியன. இறுதி போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணியும், தஞ்சாவூர் மாவட்ட அணியும் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் திருவள்ளூர் அணி 1 கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தொழில் அதிபர் பள்ளத்தூர் பி.எல். படிக்காசு தலைமை தாங்கினார். செட்டிநாடு பெண்கள் ஆக்கி கிளப்பின் தலைவரும், தொழில் குழும இயக்குனர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். முன்னதாக தொழிற் குழும இயக்குனர் பெரியசாமி அறிமுக உரையாற்றினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் வெற்றிக்கோப்பை மற்றும் பரிசு வழங்கினார். போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக சென்னை ஆர்.வி. அகாடமி அணியைச் சேர்ந்த தீபிகா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் ராமநாதபுரம் ஆக்கி கழக செயலாளர் செல்லத்துரைஅப்துல்லா, பேராசிரியர் அய்க்கண், முன்னாள் எம்.எல்.ஏ. சுப துரைராஜ், தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சுந்தர், ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்ட ஆக்கி கழக தலைவர் அறிவுத்திலகம், துணைத்தலைவர் விசுவலிங்கம், செயலர் தியாகபூமி, மகளிர் பொறுப்பாளர் அழகிமீனாள், தேவதாஸ், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி துணைப் பேராசிரியர் முரளிராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செட்டிநாடு பெண்கள் காபி கிளப் செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Next Story