கட்சித்தாவல் விவகாரம்: வழக்கில் சிக்கியவர்களுக்கு பா.ஜனதாவில் இடமில்லை சரத்பவாருக்கு, முதல்-மந்திரி பதிலடி


கட்சித்தாவல் விவகாரம்: வழக்கில் சிக்கியவர்களுக்கு பா.ஜனதாவில் இடமில்லை சரத்பவாருக்கு, முதல்-மந்திரி பதிலடி
x
தினத்தந்தி 29 July 2019 4:45 AM IST (Updated: 29 July 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கட்சித்தாவல் விவகாரத்தில் வழக்கில் சிக்கியவர்களுக்கு பா.ஜனதாவில் இடமில்லை என கூறி சரத்பவாருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி அளித்துள்ளார்.

புனே,

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியில் இணைந்தார். இதேபோல் அக்கட்சியின் எம்.எல்.ஏ. வைபவ் பிச்சாத் நேற்று முன்தினம் பா.ஜனதாவில் இணையப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கட்சி தலைவர்கள் கட்சி தாவலில் ஈடுபடுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர் “பதவியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அமலாக்க துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் உதவியுடன் மற்ற கட்சி தலைவர்களை வலுக்கட்டாயமாக தங்கள் கட்சியில் இணைத்து வருகிறார்கள். பா.ஜனதா மற்ற கட்சிகளின் தலைவர்கள் பின்னாலேயே எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது” என்றார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறியதாவது:-

சரத்பவார் தங்கள் கட்சி தலைவர் ஏன் விலகுகின்றனர் என்பதை ஆய்வு செய்யவேண்டும். பா.ஜனதா தெளிவாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பா.ஜனதாவில் இணைய தயாராக உள்ளனர். இருப்பினும் சிலர் மட்டுமே கட்சியில் சேர அனுமதிக்கப்படுகின்றனர். அமலாக்கத்துறை வழக்கு உள்பட ஊழல் வழக்களில் சிக்கியுள்ள யாரும் கட்சியில் இணைக்கப்படமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு தேவையில்லை.

நாங்கள் யாருக்கு பின்னாலும் ஓடவில்லை. தற்போது மக்கள் தான் பா.ஜனதாவுக்கு பின்னால் ஓடுகின்றனர். நாங்கள் அவர்களுக்கான நல்லதை கண்டறிந்து அதற்காக உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story