2 வாழைப்பழங்கள் விலை நடிகரிடம் ரூ.442 வசூலித்த ஓட்டலுக்கு அபராதம்


2 வாழைப்பழங்கள் விலை நடிகரிடம் ரூ.442 வசூலித்த ஓட்டலுக்கு அபராதம்
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

பிரபல இந்தி நடிகர் ராகுல்போஸ். இவர் தமிழில் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக ராகுல்போஸ் சண்டிகர் சென்று இருந்தார். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பிறகு 2 வாழைப்பழங்களுக்கு ஆர்டர் செய்தார். ஓட்டல் ஊழியர்கள் அவரது அறைக்கு வாழைப்பழங்களை கொண்டு வந்து கொடுத்தனர். பில்லில் 2 வாழைப்பழங்கள் விலை ரூ.442 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து அவர் அதிர்ச்சியானார். இதைத்தொடர்ந்து பழங்களையும் பில்லையும் வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில் இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். பழத்துடன் வந்துள்ள பில்லை பாருங்கள் இந்த 2 வாழைப்பழங்களின் விலை ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ.442.50. இதற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை என கேலியாக பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதைத்தொடர்ந்து கலால் மற்றும் வரி விதிப்பு ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார். பழங் களுக்கு வரி விதிப்பது இல்லை என்றும், ஓட்டல் நிர்வாகம் வரிவிதித்தது எப்படி என்று கேட்டு நோட்டீசும் அனுப்பினர். இந்த நிலையில் 2 வாழைப்பழங் களுக்கு ரூ.442.50 வசூலித்த அந்த ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் ஓட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு பழங்கள் இலவசமாக தரப்படும் என்று ஓட்டல் நிர்வாகம் தற்போது அறிவித்து உள்ளது.

Next Story