குலசேகரன்பட்டினத்தில் பணியின் போது தகராறு: கால்நடை மருத்துவர்- ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு


குலசேகரன்பட்டினத்தில் பணியின் போது தகராறு: கால்நடை மருத்துவர்- ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 July 2019 3:30 AM IST (Updated: 29 July 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் பணியின் போது தகராறில் ஈடுபட்டதாக கால்நடை மருத்துவர், ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குலசேகரன்பட்டினம்,

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

குலசேகரன்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி வேம்பு (வயது 27). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் குலசேகரன்பட்டினம் சவேரியர் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் கனகமணி (35) என்பவர் கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 26-ந் தேதி இவர்கள் 2 பேரும் பணியில் இருந்தனர். அப்போது கனகமணியின் செல்போனை வேம்பு எடுத்து பார்த்து கொண்டு இருந்தார். இதனை அறிந்த கனகமணி, வேம்புவிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அது கைகலப்பாக மாறியது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து வேம்பு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், கனகமணி உடன்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து 2 பேரும் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார்கள் கொடுத்தனர். அதன் பேரில் வேம்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் கனகமணி மீதும், கனகமணி கொடுத்த புகாரின் பேரில் வேம்பு மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story