கலெக்டருக்கு வந்த ரகசிய தகவல், ரேஷன் அரிசியை மாவாக்கி கேரளாவுக்கு கடத்தல் - மில் உரிமையாளர் கைது
கலெக்டருக்கு வந்த ரகசிய தகவலின்அடிப்படையில், மேட்டுப்பாளையம் அருகே ரேஷன் அரிசியை மாவாக்கி கேரளாவுக்கு கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி சமயபுரம் என்ற கிராமத்தில் ரேஷன் அரிசியை மாவாக்கி கேரளாவுக்கு கடத்துவதாக மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு நேற்றுக்காலை ரகசிய தகவல் கிடைத்தது. அவர், உடனே நடவடிக்கை எடுக்குமாறு பறக்கும் படையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் உணவு வழங்கல் துறையின் பறக்கும் படையினர் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுக்காலை குறிப்பிட்ட இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் சமயபுரம் என்ற கிராமத்தில் ஒரு மில்லில் 2 மாவு அரைக்கும் எந்திரங்கள் இருந்தன. அதில் ரேஷன் அரிசியை மாவாக்கி பாக்கெட் போட்டு கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த மாவு மில் உரிமையாளர் செல்வராஜ் (வயது 53) என்பவர் கைது செய்யப்பட்டார்.
மாவு மில்லில் இருந்த 53 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு மூட்டையிலும் 50 கிலோ ரேஷன் அரிசி இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.66 ஆயிரம் என்று மதிப்பிடப் பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாவு மில்லுக்கு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்தனர். இந்த வழக்கு கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட செல்வராஜ் ரேஷன் அரிசியை எங்கிருந்து, எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்? அவருக்கு யார்-யார் சப்ளை செய்தார்கள்? ரேஷன் கடையில் இருந்து வாங்கினாரா? இதற்கு முன்பு கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியிருக்கிறாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி மாவு பாக்கெட்டை செல்வராஜ் மேட்டுப்பாளையம் பகுதியிலும் விற்றதாக கூறப்படுகிறது. அதை கடைக்காரர்கள் யாராவது வாங்கி விற்றார்களா? என்றும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story