கடலூர் மத்திய சிறையில், செல்போனில் பேச கைதிகளுக்கு உதவி - ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
கடலூர் மத்திய சிறையில் செல்போனில் கைதிகள் பேச உதவியதாக ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தில் இருப்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி கைதிகள் மறைத்து வைத்துள்ள செல்போன்களை கண்டெடுத்தும், பறிமுதல் செய்தும் வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மத்திய சிறை அலுவலர் மோகன்குமார் தலைமையில் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறையில் உள்ள அறைகள் மற்றும் கைதிகளிடம் சோதனை நடத்தினார்கள். அப்போது வெளிசிறையின் பின்பகுதியில் கருப்பு நிற செல்போன் ஒன்று மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன் யாருக்கு சொந்தமானது? அதை புதைத்து வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வெளிச்சிறை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சிறைக்காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 2 செல்போன் பேட்டரிகள் இருந்தை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த இருசக்கர வாகனம் மத்திய சிறையில் உள்ள மருத்துவ உதவி மையத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வரும் தெய்வசிகாமணி என்பருக்கு சொந்தமானது என்பதும், 2 செல்போன் பேட்டரிகளும் ஆயுள்தண்டனை கைதிகள் இருசப்பன், கொளஞ்சி ஆகியோருக்கு சொந்தமானது என்பதும், செல்போனில் பேசுவதற்காக இவர்கள் தங்களிடம் உள்ள 2 பேட்டரிகளையும் வீட்டுக்கு எடுத்து சென்று சார்ஜ் செய்து தரும்படி தெய்வசிகாமணியிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கைதிகள் இருசப்பன், கொளஞ்சி ஆகியோரை பிடித்து சிறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இருசப்பனிடம் சிம் கார்டு இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அலுவலர் மோகன்குமார் கொடுத்த புகாரின் பேரில் தெய்வசிகாமணி, இருசப்பன் ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தெய்வசிகாமணி வேறு கைதிகள் யாருக்கேனும் இது போன்று செல்போன் பேட்டரிகளை சார்ஜ் செய்து கொடுத்து இருக்கிறாரா? அல்லது இவரை போல வேறு சிறை ஊழியர்கள் யாரேனும் கைதிகளுக்கு உதவி செய்து வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story