கட்டாய மதமாற்றம் செய்வதாக புகார், தர்ணா போராட்டத்தால் பரபரப்பு


கட்டாய மதமாற்றம் செய்வதாக புகார், தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே கட்டாய மதமாற்றம் செய்வதாக புகார் கூறி தர்ணா போராட்டம் நடை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிப்பட்டி,

மதுரை அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அங்கு கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் ஜெபக்கூட்டம் நடத்துவது வழக்கம். அந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு ஆசை வார்த்தை கூறியும், மதம் மாறினால் பரிசுபொருட்கள், பணம் வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்கப்படும் என்றும் பொய்யான வாக்குறுதிகள் கூறி மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்துவதாக அந்த சமூகத்தினர் புகார் கூறினர்.

மேலும் கட்டாய மதமாற்றத்தை கண்டித்து அந்த சமூகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கடந்த 21-ந்தேதி அங்குள்ள ஜெபக்கூடம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் செய்தவர்கள் கலைந்துசென்றனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் ஜெபக்கூடம் முன்பு சத்தியமூர்த்திநகர் பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கூடினர். அவர்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, அனுமதியில்லாத ஜெபக்கூடத்தை மூடுவதற்கு கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை வடக்கு தாசில்தார் செல்வராஜ், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) கனகராஜ், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இருப்பினும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story