திண்டுக்கல் மாவட்டத்தில், ரூ.3½ கோடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், குழாய் விரிவாக்க பணிகள் - கலெக்டர் தகவல்


திண்டுக்கல் மாவட்டத்தில், ரூ.3½ கோடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், குழாய் விரிவாக்க பணிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 4:15 AM IST (Updated: 29 July 2019 5:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3½ கோடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், குழாய் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் விஜயலட்சுமி நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளை பொறுத்தவரை ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஆழ்துளை கிணறுகள் இல்லாத கிராமங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுக்க அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேவைப்படும் இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டிகளை அமைக்கவும், குடிநீர் குழாய் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் உள்பட 95 குடிநீர் அபிவிருத்தி பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ரூ.3 கோடியே 65 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிகள் முறையாக நடக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக வாரத்தில் திங்கட்கிழமை தோறும் ஆய்வுக்கூட்டங்களும் நடத்தப்படும். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். அப்போது குடிநீர் பணிகளை திறம்பட மேற்கொள்வது தொடர்பான அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story