10–ம் வகுப்பு மாணவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது தந்தை மீது வழக்குப்பதிவு


10–ம் வகுப்பு மாணவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது தந்தை மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே 10–ம் வகுப்பு மாணவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. இதையடுத்து, மாணவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரணியல்,

இரணியல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெலஸ்டின் இன்பராஜ். இவர் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய 16 வயதுடைய மகன் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மாணவன் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு நண்பனுடன் டியூசனுக்கு புறப்பட்டான். மோட்டார் சைக்கிளை மாணவன் ஓட்டி செல்ல, நண்பன் பின்னால் அமர்ந்திருந்தான்.  

அவர்கள் சிறிது  தூரம் சென்றதும் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுவரில் மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தந்தை மீது வழக்கு

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுவன் என தெரிந்தும், மகனிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து அனுப்பிய ஜெலஸ்டின் இன்பராஜ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story