வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று ஒடுகத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
வேலூர்,
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒடுகத்தூர் பேரூராட்சியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1983-ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கு தேர்தல் பொறுப்பாளராக ஏ.சி.சண்முகம் பணியாற்ற வந்தார். அப்போது நான் பெரியகுளத்தில் 18-வது வார்டு செயலாளராக இருந்தேன்.
எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை முதல்-அமைச்சராக இருந்தார். அப்பேற்பட்ட இந்த கட்சியை ஜெயலலிதா வழி நடத்தி வந்தார். அவர், அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொண்டர்களாகிய நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். எம்.ஜி.ஆர். இருக்கும் போது 17 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். தற்போது 1½ கோடி தொண்டர்கள் உள்ளார்கள். யாராலும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது.
ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வருகிறோம். வரும் ஆண்டுகளில் 41 லட்சம் பேருக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தர இருக்கிறோம். குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.
மு.க.ஸ்டாலின் வாயில் வருவதெல்லாம் பொய்யான வாக்குறுதிகளாக வருகின்றது. ஆட்சிக்கு வந்தால் 150 நாள் வேலை தருகிறேன் என்று கூறி வருகிறார். நாங்கள் ஏற்கனவே 4 மாவட்டங்களில் 150 நாள் வேலை கொடுத்துவிட்டோம். 100 நாள் வேலை திட்டம் தொடர்ந்து வழங்கப்படும். அணைக்கட்டு தொகுதியில் அணைகட்ட வேண்டும் என கோரிக்கை உள்ளது. மேல்அரசம்பட்டில் அணைக்கட்ட முதல் கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் வெங்கனபாளையம் பகுதியில் ரூ.1 கோடியில் சாலை வசதி மற்றும் ரூ.41 லட்சத்தில் பஸ் நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் தேர்தல் முடிந்தவுடன் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை பெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.இதேபோல லத்தேரியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Related Tags :
Next Story