ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மன்னார்குடியில் இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் தபால் அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து 1 லட்சம் தபால்களில் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

தபால் அனுப்பும் போராட்டம்

அதனை தொடர்ந்து மன்னார்குடி நகர இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நேற்று மன்னார்குடியில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள், அரசு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெற்று மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர தலைவர் சார்லஸ்விக்டர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சிவரஞ்சித் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி அமைப்பின் மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன் பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன் தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலை, அஸ்வினி, ஆனந்த்,மணி, பாலகுரு, ராஜ்குமார், மதன்குமார் மாணவர் மன்ற நிர்வாகி பாரதசெல்வன், ஏ.ஐ.டி.யூ.சி தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Next Story