தமிழகத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு


தமிழகத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 July 2019 11:00 PM GMT (Updated: 29 July 2019 7:08 PM GMT)

தமிழகத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையா குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி,

ரெயில்வேயில் தனியார்மயத்தை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக மத்திய அரசு கொண்டு வருகிறது. குறிப்பாக 100 நாட்களில் ஒவ்வொரு ரெயில்வே மண்டலத்திலும் 2 ரெயில்களை தனியார் மயத்திற்கு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதில் தெற்கு ரெயில்வேயில் தமிழகத்தில் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலையும் தனியாரிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதேபோல லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தனியார் மயமாக்கப்பட உள்ளது. இதனால் ரெயில்களில் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டியது வரும். தற்போது டிக்கெட் கட்டணத்தில் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் நிறுத்தப்படும்போது ரெயில் கட்டணம் உயரும். இதனால் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

ஐ.சி.எப். தொழிற்சாலை

காமராஜர் ஆட்சி காலத்தில் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்ட ஐ.சி.எப். தொழிற்சாலையில் ரெயில் பெட்டிகள் தரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை தற்போது லாபத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை மற்றும் ரேபரேலியில் இயங்கி கொண்டிருக்கிற தொழிற்சாலையையும் தனியார் மயமாக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளார். நல்ல முறையில் செயல்படுகிற ரெயில்வே தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குவது கண்டிக்கத்தக்கது.

ரெயில்வே தனியார் மயமாவதன் மூலம் பொதுமக்களுக்கு தான் அதிகம் பாதிப்பு ஏற்படும். சேலம் உருக்காலை, என்.எல்.சி.யை பாதுகாக்க அங்குள்ளவர்களும், பொதுமக்களும் சேர்ந்து போராடியதை போல ரெயில்வேயை பாதுகாக்க நாங்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

போராட்டம்

தனியார்மய கொள்கையில் டிக்கெட் கட்டணம் உயருவது, பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்டவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து தெரிய வைப்போம். சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக பொதுமக்களை நேரடியாக சந்திக்க உள்ளோம். எங்களது போராட்டம் அரசியல் சார்ந்தது கிடையாது. ரெயில்வேயை தனியார்மயமாக்க முயற்சிப்பதை எதிர்த்து பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ரெயில்வேயை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கை மற்றும் அதனை எதிர்ப்பது குறித்து ஊழியர்கள் மத்தியில் கண்ணையா பேசினார். அப்போது கோட்ட செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதன்பின் திருச்சி ஜங்ஷனில் கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்தில் கண்ணையா பேசினார். இதில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story