கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டதால் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா
கூட்டணி அரசு கவிழ்ந்து விட்டதால் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-
நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதை நாம் செய்ய முடியாது. நாம் இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். நம் முன்னோர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க செய்ய அவகாசம் வழங்கும் அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். அதை பலப்படுத்த வேண்டும்.
நான் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் எனது பணியை செய்துள்ளேன். என்னால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த பதவியை காங்கிரஸ் தலைவர்கள் என்னை அழைத்து வழங்கினர். நான் பதவி வேண்டும் என்று யாரிடமும் போய் கேட்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து சபாநாயகர் பதவியை வழங்கியுள்ளனர். அதை முடிந்தவரை சிறப்பான முறையில் அரசியலமைப்புக்கு ஏற்ப பணியாற்றினேன்.
14 மாதங்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்த சபையின் உறுப்பினர்கள், எனது அலுவலக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தையும் மறுஆய்வு செய்ய வேண்டும். நான் இந்த பதவியை விட்டு விலக வேண்டிய தருணம் வந்துவிட்டது. நான் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு ரமேஷ்குமார் பேசினார்.
அதன் பிறகு அவர் தனது ராஜினாமா கடிதத்தை, துணை சபாநாயகர் கிருஷ்ணாரெட்டியிடம் வழங்கிவிட்டு சென்றார்.
Related Tags :
Next Story