துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.33 லட்சம் தங்கம் பறிமுதல் கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மங்களூரு,
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு மும்பை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து மங்களூருவுக்கு வரும் விமானம் மூலம் தங்கம் கடத்தி செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிலையத்தில் சுங்கவரித் துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து பஜ்பே விமான நிலையத்திற்கு ஒரு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கேரளாவை சேர்ந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒருவரின் உடைமையில் இருந்து 652 கிராம் தங்கமும், மற்றொருவரின் உடைமையில் இருந்து 422 கிராமம் தங்கமும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்தம் ஒரு கிலோ 74 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.33 லட்சம் என்று கூறப்படுகிறது.
மேலும் துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக கேரளாவை சேர்ந்த 2 பயணிகளையும் சுங்கவரித் துறையினர் கைது செய்தனர். கைதானவர்களின் பெயர், விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story