திண்டிவனத்தில், நெல் வியாபாரியை கடத்த முயற்சி - ஆந்திராவை சேர்ந்த கும்பலை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு


திண்டிவனத்தில், நெல் வியாபாரியை கடத்த முயற்சி - ஆந்திராவை சேர்ந்த கும்பலை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 July 2019 4:00 AM IST (Updated: 30 July 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் நெல் வியாபாரியை கடத்த முயன்ற ஆந்திராவை சேர்ந்த கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மேல்பேரடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரகமத்துல்லா(வயது 51). இவர் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் அலுவலகம் வைத்து நெல் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் ரகமதுல்லா தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் ரகமத்துல்லாவை பிடித்து இழுத்துச் சென்று காரில் கடத்திச் செல்ல முயன்றனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கார்களில் வந்தவர்களை சுற்றி வளைத்து ரகமத்துல்லாவை மீட்டனர். அப்போது பொதுமக்களுக்கும், ரகமத்துல்லாவை கடத்த முயன்ற கும்பலுக்கும் இடையே கைகலப்பு நடந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் பற்றி ரோஷணை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகமத்துல்லாவை கடத்த முயன்ற கும்பலையும், ரகமத்துல்லாவையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த சென்னூர் பகுதியை சேர்ந்த பிரமையா என்பவருக்கு ரகமதுல்லா நெல் வாங்கிய தொகை தரவேண்டி இருப்பதாகவும், இதுபற்றி பிரமையா சென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது. மேலும் பிரமையா அடியாட்கள் மற்றும் சென்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 2 போலீஸ்காரர்களை சாதாரண உடையில் அழைத்து வந்து ரகமத்துல்லாவை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார், ரகமத்துல்லாவிடம் கேட்டபோது, பிரமையா அனுப்பிய நெல் மூட்டைகளுக்கான பணத்தை அதனை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் கொடுத்து விட்டேன் என்றார். இதையடுத்து ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி டிரைவரை போலீசார் தொடர்பு கொண்டு விசாரணைக்காக ரோஷணை போலீஸ் நிலையத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருமாறு கூறியுள்ளனர். டிரைவரிடம் விசாரணை நடத்திய பிறகே இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. வெளி மாநில போலீசார் விசாரணைக்கு தமிழகம் வந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் வழக்கில் தொடர்புடைய நபரிடம் விசாரணை நடத்த செல்ல வேண்டும். ஆனால் பிரமையா தனது அடியாட்கள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்களுடன் ரகமத்துல்லாவை உள்ளூர் போலீசாருக்கு தெரியாமல் கடத்திச் செல்ல முயன்றதால், அவர்கள் வந்த 2 கார்களை ரோஷணை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story