உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம், கழுத்தை அறுத்து மாணவன் படுகொலை - அண்ணன் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே வனப்பகுதியில் கழுத்தை அறுத்து பள்ளி மாணவன் படுகொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக அவனது அண்ணன் உள்பட 8 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவர் வெளிநாட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி. இவர்களுக்கு சரத்குமார் (வயது 20), சிவக்குமார்(15) என்ற 2 மகன்களும், சவுந்தர்யா(18) என்ற மகளும் உள்ளனர்.
இதில் சிவக்குமார் எலவனாசூர்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் சிவக்குமார் வீட்டில் இருந்தான். பின்னர் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவன், இரவு வரைக்கும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவனது தாய் மற்றும் அண்ணன் சரத்குமார் ஆகியோர் சிவக்குமாரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
இரவு 11 மணியளவில் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் சிவக்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து, அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து உடனடியாக எடைக்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி, கொலையான சிவக்குமாரின் வீட்டின் முன்பு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதனால் போலீசாருக்கு சிவக்குமாரின் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்தது. அதன் பேரில் அவரது அண்ணன் சரத்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 7 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story