குன்னூர் ஏல மையத்தில், தேயிலைத்தூள் விலை உயர்வு


குன்னூர் ஏல மையத்தில், தேயிலைத்தூள் விலை உயர்வு
x
தினத்தந்தி 30 July 2019 3:00 AM IST (Updated: 30 July 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை உயர்ந்து உள்ளது.

குன்னூர்,

தேயிலை உற்பத்தியில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கம்பெனி தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள், குன்னூரில் தேயிலை வர்த்தகர் அமைப்பு நடத்தும் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கிறார்கள். இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 25, 26-ந் தேதிகளில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு மொத்தம் 19 லட்சத்து 19 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்காக வந்தது. இதில் 12 லட்சத்து 85 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6 லட்சத்து 34 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 17 லட்சத்து 69 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 93 சதவீத விற்பனை. விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.14 கோடியே 22 லட்சம் ஆகும்.

ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் ரூ.2 விலை உயர்வு ஏற்பட்டது. அதிகபட்ச விலையாக சி.டி.சி. தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.269, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.286 என ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.63 முதல் ரூ.68 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.103 முதல் ரூ.125 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.62 முதல் ரூ.65 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.117 வரையும் ஏலம் சென்றது. அடுத்த ஏலம் வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு மொத்தம் 17 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்காக வருகிறது.

கடந்த சில வாரங்களாக குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூளுக்கு விலை வீழ்ச்சி ஏற்ப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். ஆனால் இந்த ஏலத்தில் தேயிலைத்தூள் விற்பனை கூடுதலாகி, விலையும் உயர்ந்து உள்ளது. இது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story