திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க கூட்டத்தை நடத்த வலியுறுத்தி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்


திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க கூட்டத்தை நடத்த வலியுறுத்தி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க கூட்டத்தை உடனடியாக நடத்த வலியுறுத்தி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர்,

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 2,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமனம் செல்லாது என எதிர்க்கட்சியினர் மதுரை ஐகோர்ட்டு கிளையின் மூலம் தடையாணை பெற்றனர்.

அதன்பின்னர் கடந்த ஒரு ஆண்டாக கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆட்சியரின் கீழ் சங்கம் செயல்பட்டு வந்தது. கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டு கிளை தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு சங்கத்தை நிர்வாகிக்கலாம் எனவும் ஏற்கனவே வழங்கப்பட்ட தடையை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவினர் சங்கத்தில் பொறுப்பேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் நிர்வாக குழு மீது நம்பிக்கையில்லை எனவும், சங்க பேரவை கூட்டம் உடனடியாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு பட்டுத்துணி நூல் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பேரூர் செயலாளர் எஸ்.கே.பஞ்சநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாகேந்திரன், நாராயணசாமி, சரவணன், மணிமூர்த்தி, துளசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story