ஓய்வுபெற்ற அதிகாரி மகன்களுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
மகன்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது ஓய்வுபெற்ற அதிகாரி போலீசில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்,
நிலக்கோட்டை தாலுகா கட்டக்காமன்பட்டியை அடுத்துள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் கோட்டத்தில் பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றேன். எனது மகன்களான ராஜேஸ்குமார், ஜெகதீஸ்குமார் ஆகியோர் என்ஜினீயரிங் படித்துள்ளனர்.
எனது உறவினரும், மற்றொரு நபரும் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர்களாக வேலை செய்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் ஒருநாள் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது எனது மகன்களுக்கு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதற்காக சென்னையில் நேர்முகத்தேர்வு என்று கூறி எனது மகன்களை அழைத்து சென்றனர்.
அங்கு மின்சார வாரியத்தில் நேர்முகத்தேர்வுக்கு எனது மகன்களை அழைக்கவில்லை. இதனால் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை அல்லது அரசு பாலிடெக்னிக் கல்லூரி உதவி பேராசிரியர் வேலை அல்லது டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். மேலும் பணம் கொடுத்தால் வேலை வாங்கி விடலாம் என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து வேலை வாங்கி தருவதாக 3 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ரூ.20 லட்சத்தை வாங்கினர். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. இதனால் நான் பணத்தை திரும்ப கேட்டேன். இதையடுத்து ரூ.10 லட்சத்தை திரும்ப கொடுத்தனர். மீதமுள்ள பணத்தை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story