காதல் மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2019 3:45 AM IST (Updated: 30 July 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாலியமங்கலம்,

தஞ்சை-நாகை சாலையில் கோவிலூரை அடுத்துள்ள நெல்லித்தோப்பு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரது மகன் சுந்தரமூர்த்தி(வயது 29). தஞ்சையில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த இவர், தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையத்தை சேர்ந்த ஜெயக்கொடியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி மற்றும் மகன்களான தர்ஷன், ரக்‌ஷன் ஆகியோருடன் ரெட்டிபாளையத்திலேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின்போது சுந்தரமூர்த்தி தனது மனைவி ஜெயக் கொடியை அடித்து கொலை செய்தார்.

ஜாமீனில் வந்தார்

இது தொடர்பாக கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து சுந்தரமூர்த்தி ஜாமீனில் வெளியில் வந்தார். ஜாமீனில் வெளியில் வந்த அவர் தனது தாயாருடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.

ஆத்திரத்தில் தனது மனைவியை கொன்றது குறித்தும், இதனால் தனது 2 மகன்களையும் பிரிந்து வாழ்வதையும் நினைத்து மனமுடைந்த இவர் தனது உறவினர்களிடம் இது தொடர்பாக கூறி அழுது புலம்பி வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது தாயார் வெளியில் சென்று இருந்த நேரத்தில் தனது வேட்டியால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுந்தரமூர்த்தி அண்ணன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story