மாவட்ட செய்திகள்

வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் - முத்தரசன் பேட்டி + "||" + The AIADMK will lose the Vellore constituency by-election - Mutharasan

வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் - முத்தரசன் பேட்டி

வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் - முத்தரசன் பேட்டி
வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடையும் என்று ஈரோட்டில் முத்தரசன் கூறினார்.

ஈரோடு,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்டங்கள், அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து கொண்டும், சட்டமாக நிறைவேற்றி கொண்டும் இருக்கிறது. எந்த விதமான விவாதங்களும் இன்றி, எதிர் கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தாலும் கூட அந்த கருத்துகளுக்கு எந்தவிதமான மதிப்பும் அளிக்காமல் தங்களுக்கு உரிய மிருக பலத்துடன் கூடிய மெஜாரிட்டியை பயன்படுத்தி தாங்கள் விரும்பியது அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார்கள்.

நாடு முழுவதும் இருக்கின்ற கோடிக்கணக்கான கூலி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்ற வகையில், வேலை உறுதியளிப்பு திட்டம் சட்டமாக்கப்பட்டது. தற்போது இந்த திட்டதை மத்திய அரசு செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து இருக்கிறது.

அதுபோல் தகவல் அறியும் உரிமை சட்டம். அந்த சட்டத்தின் மூலம் அனைத்து தகவல்களையும் பெறமுடியாது என்றாலும்கூட, செய்திகளை வெளியில் கொண்டு வருவதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. ஆனால் அந்த சட்டம் தற்போது நீர்த்து போய்விட்டது.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த மட்டில் அங்கு என்னதான் தில்லுமுல்லு செய்தாலும், தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அங்கு எங்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற 3–ந் தேதி நடைபெற உள்ளது. இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் கூட்டணியில் இருக்கிற பா.ஜ.க.வை பிரசாரத்திற்கே வரவேண்டாம் என்று அ.தி.மு.க. சொன்னால் அதன் பொருள் என்ன?. இதில் இருந்தே தெரிகிறது அந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று. அந்த சந்தர்ப்பவாத கூட்டணி இந்த தேர்தலிலும் தோல்வி அடையும். வேலூர் தொகுதியில் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் அணியை சேர்ந்த தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதியாகி இருக்கிறது.

ரெயில்வே துறை, சேலம் உருக்காலை, இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற நிறவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.