மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: காங்கேயம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த டிரைவர்
மனைவி பிரிந்து சென்றதால் காங்கேயம் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காங்கேயம்,
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 31). ஆம்புலன்ஸ் டிரைவர் இவர் காங்கேயம் அருகே உள்ள காடையூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து முடித்த உறவுப்பெண்ணான ரம்யாவை (25) திருமணம் செய்தார்.
திருமணமாகி இருவரும் மோகனூரில் வசித்து வந்தனர். கடந்த 1½ மாதத்திற்கு முன்பு ரம்யா கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனையடுத்து ஜீவானந்தம் சமாதானம் செய்து அழைத்து சென்றார்.
இந்த நிலையில் நேற்று திடீரென ஜீவானந்தத்தின் மனைவி ரம்யா கல்லூரியில் உடன் படித்த காங்கேயம் சிக்கம்பாளையத்தைச்சேர்ந்த நண்பருடன் சென்றதாக தெரிகிறது.
இதனையடுத்து ஜீவானந்தம் தனது மனைவி காணாமல் போனது குறித்து மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் காங்கேயம், படியூர் சிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் தனது மனைவியை தேடி வந்துள்ளார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தனது மனைவி காணாமல் போனது குறித்து காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ரம்யாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் புகார் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜீவானந்தம் காங்கேயம் போலீஸ் நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டு ரோட்டுக்கு ஓடினார்.
உடனே அக்கம்பக்கம் உள்ளவர்கள் தீயை அணைத்து பலத்த தீக்காயம் அடைந்த ஜீவானந்தத்தை காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.