முதுகுளத்தூர் அருகே ஊருணியில் பந்து என வீசிய போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது; 2 சிறுவர்கள் காயம்


முதுகுளத்தூர் அருகே ஊருணியில் பந்து என வீசிய போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது; 2 சிறுவர்கள் காயம்
x
தினத்தந்தி 29 July 2019 10:15 PM GMT (Updated: 29 July 2019 9:52 PM GMT)

முதுகுளத்தூர் அருகே ஊருணியில் பந்து என்று நினைத்து தூக்கி வீசி விளையாடிய போது, நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் நிமிஸ் (வயது 8), சூர்யா (8). இவர்கள் அங்குள்ள ஊருணியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பந்து போன்று கிடந்த உருண்டையான பொருளை எடுத்து, தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த உருண்டையான பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. நல்ல வேளையாக தூக்கி எறிந்தபோது அந்தரத்திலேயே வெடித்ததால் அந்த சிறுவர்கள் 2 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.

இதற்கிடையே அந்த சத்தத்தை கேட்டதும், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஓடிவந்து பார்த்தனர். காயம் அடைந்த அடைந்த 2 சிறுவர்களும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுவர்கள் தூக்கி போட்ட போது வெடித்தது நாட்டு வெடிகுண்டு என தெரிய வந்தது. மேலும் போலீசார் அங்கு சோதனை நடத்தி, அங்கு கிடந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டையும் கைப்பற்றினர்.

ஊருணியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததும், அங்கு கிடந்த மற்றொரு குண்டு கைப்பற்றப்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அந்த நாட்டு வெடிகுண்டுகளை யார் தயாரித்தது, ஊருணிக்கு வந்தது எப்படி? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி, அதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story