மோட்டார் சைக்கிள்கள் மோதல்; லேப் டெக்னீசியன் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; லேப் டெக்னீசியன் சாவு
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 2019-07-30T22:01:38+05:30)

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் லேப் டெக்னீசியன் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கடை,

புதுக்கடை, கீழ்குளம் செந்தரை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் (வயது46). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு வேலை முடிந்த பின்பு கருங்கல் வழியாக செந்தரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்ற போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் கருங்கல் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவர் வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஜானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த டேனியலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுக்கடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ஜானுக்கு ஆட்லின் வின்சியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story