தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே மாட்டுஇறைச்சி சாப்பிட்டது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால்

சிக்கல் பகுதியில் தற்காலிக புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைது செய்வதாக கூறி இதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரி திடலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளதுரை, வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிஷ்ணன், சுப்பிரமணியன் உட்பட ஏராளமான போலீசார் நாகை அவுரித்திடலில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மாலை 6 மணிஅளவில் நாகை புதிய பஸ் நிலைய பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திரண்டனர்.

அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.

அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

Next Story