வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி - கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
திண்டிவனம் அருகே உள்ள கொள்ளார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், அந்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் கிராம மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் நடந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகளை பொக்லைன் எந்திரம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு செய்யும் பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து தலா ரூ.100 வசூல் செய்கின்றனர். இதுகுறித்து நாங்கள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பணிக் காக பொதுமக்களை பயன்படுத்தாமல், பொக் லைன் எந்திரம் மூலமே ஏரி ஆழப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். எனவே தாங்கள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story