தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 30 July 2019 10:30 PM GMT (Updated: 30 July 2019 6:55 PM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.

மருத்துவமனை தின விழா

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனை தின விழா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் அவர், சிறப்பாக பணியாற்றிய 10 டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதியில் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு புதிதாக வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களையும் பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

புதிய கருவிகள்

மருத்துவமனை தினத்தில் சுகாதாரத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பயனடைய செய்தல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வழங்கப்பட்டு வரும் நவீன மருத்துவ சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல், பொதுமக்கள் நேரடியாக டாக்டர்களை அணுகி தங்களுக்கு தேவையான ஆலோசனைகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சமூக பொறுப்பு நிதி மற்றும் அரசு நிதியுடன் ரூ.2 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு தேவையான நவீன சிகிச்சைகள் அளிக்கும் வகையில் புதிய கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் 12 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டதை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலேஸ், தாய்-சேய் நலப்பிரிவு டாக்டர் மெர்சி ரொட்ரிகோ மற்றும் மருத்துவ பிரிவு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்த மருத்துவமனை தின விழாவில், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் பூவேசுவரி, டாக்டர்கள் பாலகிருஷ்ணன், மோசஸ் பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பாக மருத்துவ சேவை செய்த டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்களுக்கு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிதா ஷிரின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் நன்றி கூறினார். காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் தலைமை டாக்டர் ராணி தலைமை தாங்கினார். டாக்டர்கள் இத்ரிஸ், ஜாபர் சாதிக், இஸ்ஸாக், பிரைட்டன், முருக பொற்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்தாளுனர் ஸ்டீபன் வரவேற்று பேசினார். காயல்பட்டினம் நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) புஷ்பலதா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னாள் நகரசபை தலைவி ஆபிதா, சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் ஹமீது நன்றி கூறினார்.

மெஞ்ஞானபுரம்

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை தின விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனி பிரிமின் தலைமை தாங்கினார். டாக்ட ர்கள் கல்யாணி, பேபியஸ், ஜெகதீஷ், நாயகி, விஜயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ் வரவேற்று பேசினார். விழாவில் 40 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் சேதுபதி மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். ஆழ்வார்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் டாக்டர்கள் பவுலா மேரி, விஜய ரோகிணி ஆகியோர் தலைமை தாங்கினர். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, தமிழக அரசின் அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. டாக்டர்கள் ஜூடி, விஜயபாண்டி, பிரேமலதா, சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Next Story