திருப்பூரில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்த மர்ம ஆசாமிகள்; பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்


திருப்பூரில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்த மர்ம ஆசாமிகள்; பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து  போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 31 July 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்த மர்ம ஆசாமிகளை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி.சந்திப்பை அடுத்த அண்ணா வீதி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). இவருடைய மனைவி மணி (50). இவர்களுடைய வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் இவர்கள் தரைதளத்தில் மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் பாலசுப்பிரமணியம் வெளியே சென்றிருந்தார். அப்போது கடையில் கூட்டம் குறைவாக இருந்ததால் மணி அவருடைய வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று துணியை காய போட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம ஆசாமிகள் 2 பேர் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் மணி கழுத்து மற்றும் காதில் கிடந்த சங்கிலி, கம்மலை கழட்டுமாறு மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணி நகையை கழட்டி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள் மணியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணி திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டுள்ளார்.

அவருடைய சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் மர்ம ஆசாமிகள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றார். ஒருவர் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கிக்கொண்டார்.

அவரை பொதுமக்கள் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்கள் பிடியில் இருந்து அந்த நபரை மீட்டனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தேனிமாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவினாசி ரோடு பத்மாவதிபுரம் முதல் வீதியில் வசித்து வந்த கிருஷ்ணன் (31) என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story