மாவட்ட செய்திகள்

மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் சமுதாய வளைகாப்பு + "||" + Community baby shower in government hospitals by the birth of doctor Muthulekshmredi

மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் சமுதாய வளைகாப்பு

மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் சமுதாய வளைகாப்பு
மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
அன்னவாசல்,

அரசு மருத்துவமனைகளில் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டியின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான நேற்று அன்னவாசல் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனை தினவிழா கொண்டாடப்பட்டது.


அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை மருத்துவர் மதியழகன் தலைமை தாங்கி, மருத்துவமனை தினவிழா கொண்டாடுவதன் நோக்கம் குறித்து பேசினார். விழாவில் புதுக்கோட்டை கூட்டுறவு வங்கியின் தலைவர் சின்னத்தம்பி, அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி, அப்துல்அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து கர்ப்பிணி களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. தொடர்ந்து பிரசவித்த பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகமும் வழங்கப்பட்டது. விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வளைகாப்பு விழா

இதேபோல் பரம்பூரில் மருத்துவமனை தின விழாவில் மதர்தெரசா கல்லூரி நிறுவனர் உதயக்குமார் கலந்துகொண்டு சிறப்பாக பணிபுரியும் செவிலியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பின்பு வளைகாப்பு விழா மற்றும் பரிசு பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. இதில் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கண்ணாமலைப்பட்டியில் நடந்த விழாவில் மருத்துவர் ஆசீக் அசன் முகமது தலைமையில், வளைகாப்பு விழாவும், அதனை தொடர்ந்து அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் மருத்துவர் சுகன்யா உள்பட மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அன்னவாசல் பகுதியில் உள்ள இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, ராப்பூசல், மதியநல்லூர், நார்த்தாமலை, காவேரிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

நீர்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

விராலிமலை ஒன்றியம், ஆவூர் அருகே உள்ள நீர்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமுதாய வளைகாப்பு மற்றும் மருத்துவமனை தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட தொற்றா நோய்க்கான மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா தலைமை தாங்கி பேசுகையில், கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் அவர்கள் உட்கொள்ள வேண்டிய சத்தான உணவு பொருட்கள் பற்றியும், அனைவரும் தவறாமல் ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதுடன் சத்துஊசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று பேசினார். நீர்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் விக்னேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முருகேசன் வரவேற்று பேசினார். இதில் கலந்து கொண்ட 65 கர்ப்பிணிகளுக்கும் பூ, சந்தனம் வைத்தும் வளையல் அணிவித்தும் சமுதாய வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது.

வினாடி-வினா போட்டி

இதைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால குறிப்புகள் குறித்த வினாடி-வினா போட்டியும், மருத்துவமனை பணியாளர்களுக்கு சிறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நீர்பழனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் முகமதுயூசுப் நன்றி கூறினார்.

காரையூர்

காரையூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை தினம் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பரணிதரன், பொன்னமராவதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார். காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 30 கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. பின்னர் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலை

விராலிமலை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தினவிழா நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை டாக்டர் ஜான் விஸ்வநாத், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு தனித்தனியே விளையாட்டு போட்டி, பாட்டுப்போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவமனையில் சிறந்த டாக்டர் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதேபோல ஆவூர், மண்டையூர், ராசநாயக்கன்பட்டி, கொடும்பாளூர், பாலாண்டாம்பட்டி, களமாவூர் உள்பட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனை தினவிழா கொண்டாடப்பட்டது.